"ஏய் எழுந்திரிடி இன்னும் தூங்குறா அதுவும் மார்கழி மாசத்துல" அன்பான தாயின் அன்றாட அர்ச்சனை இது. அதிலும் நாளை விடுமுறை நாள் என மூளை இரவில் அரைகூவல் விட்டதால் சற்று மெய்மறந்து உறங்கிகொண்டிருந்தேன். குளிரை தடுக்கும் எனது போர்வைக்கு தாயின் இசையை தடுக்கும் சக்தி இல்லை.
"இப்ப எந்திருக்கிறியா இல்லையா" இதற்கு மேல் தாங்காது.
"ஏய் லட்சுமி என்ன ரொம்ப சத்தம் போடுற டேவிட் வரட்டும் இரு உனக்கு இருக்கு" என சோம்பல் முறித்துகொண்டு எழுந்து வழக்கமாக செல்ல சண்டையை துவங்கினேன். அப்படி இல்லை என்றால் எனக்கு அன்றைய நாளில் ஒரு திருப்தி இருக்காது.
"ஏன்டி அப்பாவ பேர் சொல்லியா கூப்பிடுற" அம்மாவும் வழக்கம்போல் ஆரம்பித்தார்.
"நீ லவ் பன்னும் போது எப்படி கூப்பிட்ட" என மேலும் சீண்டினேன்.
ஆம் அவர்கள் இருவரும் எம்ஜிஆர் சிவாஜி காலத்திலேயே கலப்பு திருமணம் செய்து புரட்சி செய்தவர்கள். புரட்சி என்றால் விளைவு வேண்டும் அல்லவா அதனால் இருவரும் சொந்த ஊரில் இருந்து பல அடிகள் தள்ளியிருந்தனர்.
"அது அந்த காலம்டி" என தன் பக்கம் நியாயம் உள்ளது என சாதித்தார் லட்சுமி.
"ம்ம்ம்ம் இது பதில் இல்லையே" என பெட்டிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.
"சரி வெட்டியா பேசாம போய் குளிச்சுட்டடு ராதாகூட போய்ட்டு வா"
"ஏம்மா இன்னைக்கு சன்டேமா இன்னைக்குமா"
"ஏண்டி ராதா எவ்வளவு பொருப்பா இருக்கா நீயும் இருக்கியே" என ஒப்பிடுதல் துவங்கியது.
எனது தாய் லட்சுமி பெயருக்கு ஏற்ற அழகு அதனால்தான் டேவிட் விழுந்துட்டார் போல பின்ன இந்த தேவதையை கடத்தும்போது ஏற்பட்ட அரிவாளின் முத்தம் டேவிட்டின் இடது கையில் சாயமாக இன்றும் உள்ளதே...
டேவிட் என் தந்தை (நான் அப்பா பொண்ணு) ரொம்ப பாசமுள்ளவர் சமூக அக்கறை அதிகம் சமத்துவம் பேசுபவர். ஆனால் லட்சுமியோ பெயருக்கு ஏற்றார்போல் பக்தி அதிகம். லட்சுமியின் இஷ்ட தெய்வமான கஜமுகனை காலையில் தரிசித்து வரவே என்ன அந்த ராதாவுடன் அனுப்பும் முயற்சியில் உள்ளார். இரண்டு மதத்தின் ஆசிர்வாதமும் ஒருங்கே பெற்றவள் ஜெனிபர் அது நான்தான்.
இந்த சிந்தனைகள் ஓடி கொண்டிருக்கும்போதே காலையில் செய்யவேண்டியவைகளை முடித்தேன்.
"ஏண்டி தலைக்கு ஷியாம்பு போட்டியா"
"ஆமா கூந்தல் அடரத்திக்கு சிக் ஷியாம்பு " என எனது கூந்தலை எடுத்து முன்னால் போட்டேன்.
"அப்படியே ஒன்னு போட்டேனா தெரியும்; தலைக்கு கெமிக்கல் போடாதடி அதான் சீகைகாய் அரைச்சு வச்சுருக்கேன்ல" லட்சுமியின் அறிவுரை இது.
"ஏம்மா உன் முடியவிட எனக்கு அதிகமாதான் இருக்கு பாரு" என என் தாயின் அருகில் போய் நின்றேன்.
"உன் வயசுல எனக்கு எவ்வளவு முடி இருக்கும் தெரியுமா " என வண்ணத்திரையில் கருப்பு வெள்ளை படத்தை ஓட்ட துவங்கினார்.
"அய்யோடா அத வச்சு தானே எங்க அப்பாவ மடக்கிட்ட" என்று முடிக்கும்போது தலையில் செல்லமாக ஒரு அடி விழுந்தது.
"ஆண்டி ஜெனி..." என்ற குரல்
அது ராதா தான் வந்துவிட்டாள். அவள் இந்த மார்கழி குளிரில் கணேஷ் மூர்த்தியை பார்க்கபோகிறாள் என அனைவரும் நினைக்கின்றனர் ஆனால் அங்கு அவளது துணை கண்ணனை சந்திக்கும் ஏற்பாடு என்று தெரியும்போது என்ன நடக்குமோ. இதில் நான் அவர்களுக்கு வாட்ச்மேன் வேறு.
"இந்தா ரெடி ஆகிட்டாமா... சீக்கிரம் கெளம்புடி" என்ற வார்த்தை வெளிபட்டது. என்னதான் அன்பு இருப்பினும் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியக்கூடாது என்பது எழுதப்படாத விதி அல்லவா அதைதான் என் தாயும் பின்பற்றுகிறார் போல.
"சரிம்மா கிளம்பிட்டேன்"
"யேய் கோயிலுக்கு போகும்போது எதுக்கு செல்போனு?!" கையில் இருந்த அந்த கருவியை பார்த்துவிட்டார் இது நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது அல்லவா.
"இல்லமா டைம் பாஸ்" (வாட்ச்மேன் வேலைக்கு டைம்பாஸ் வேண்டுமல்லவா)
"இப்ப இருக்குற புள்ளைங்க செல்போன் இல்லாம எங்க இருக்குதுங்க?" என புளம்பிகொண்டே சமையலறையில் புகுந்தார். நானும் ராதாவும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆலமரகோயிலைநோக்கி பயனத்தை துவங்கினோம்.
உன்னுடைய பெரிய எதிரி யார் என்று கேட்டால் என் வாய்தான். "வாய் இல்லைனா உன்னையெல்லாம் நாய் தூக்கிட்டு போயிடும்" என்று சிலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனாலும் திருந்தவில்லை.
"ஏண்டி ராதா கண்ணன் உன் மாமா பையன்தான அப்புறம் ஏன் இப்படி திருட்டுதனமா சந்திக்குறீங்க"
பதில் எதுவும் பேசாமல் மௌனமாக வந்தாள். அவள் அப்படிதான் அவளது மனதை திறப்பது மிக கடினம்.
"நீ எப்பவுமே இப்படிதானா?" அவளை பேச வைக்கும் முயற்சி... தோல்வி.
"அப்படி என்னதான்டி பேசுவீங்க தினமும்" அடுத்த அம்பை எய்தினேன் ஆனால் அது காதல் அம்பாக எனக்கே மாறும் என்று தெரியவில்லை.
"நீ லவ் பன்னாதான்டி உனக்கு தெரியும்" என்று ஒற்றை வரியில் முடித்தாள்.
"நான் யாரடி லவ் பன்றது?" என் மனதில் இருந்த ஒன்றை மறைத்துவிட்டு உதட்டளவில் பொய்யாக நடித்தேன்.
"ஏய் பொய் சொல்லாதடி அந்த ராஜேஷை நீ லவ் பன்ற தானே எனக்கு தெரியும்டி" நான் அவளிடம் கேட்ட கேள்வியை ஒரு டென்னிஸ் பந்தினை போல திருப்பிவிட்டாள்.
என் வாய் அமைதியை அடைந்தது கால்கள் மட்டும் மிதிவண்டியுடன் பேசிக்கொண்டிருந்தன. இருவரும் கோயிலை அடைய விநாயகரிடம் டோக்கன் போட்டுவிட்டு அவர்கள் இருவரும் அந்த ஆற்றங்கறையில் சென்று அமர்ந்தனர். நான் என் ஆண்ட்ராய்டு தோழியை எடுத்துகொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தேன்.
அவள் ராஜேஷை பற்றி பேசியது சரிதான் ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் பள்ளிபருவத்திலிருந்தே. அவனருகினில் ஓர் பாதுகாப்பு உணர்வு இருக்கும் சூரியனை சுற்றும் பூமி போல். என் மனதில் அவனை நினைக்கும்போது ஓர் இனம்புரியாத உணர்வு ஏற்படும் அதை விளக்க முடியவில்லை.
நான் எவ்வளவு பேசினாலும் அமைதியாக அமர்ந்து அனைத்தையும் கேட்பான். நான் ஒரு முடிவு எடுப்பதென்றால் அவனது உதவி இல்லாமல் என்னால் முடியாது. அதனால்தான் என்னவோ என்மனதில் பாதியாய் அவனை ஏற்றுக்கொண்டதா தெரியவில்லை. மற்றவர்களைவிட என்னை ஒருபடி மேல்தான் வைத்துள்ளான். அதனால் அவனும் என்னை விரும்புகிறான் என்று எனக்கு தோன்றுகிறது. அதுமட்டுமில்லை அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் என்னிடம் பேசுவதை கூட குறைத்துவிட்டான். அவன் என்னிடம் இருந்து விலகுகிறானா இல்லை அவனுள்ளும் காதல் உள்ளதா தெரியவில்லை.
அன்று கல்லூரியில்...
மேகங்கள் ஓர் போர்வையாக மண்ணை மூட குளிர் பரவதுவங்கியிருந்தது. பகலிலும் இரவென காட்சியளித்தது. வானத்திலிருந்து பன்னீர் துளிகள் மழையாய் பொழிய பலத்த சாரல் வீசியது. அதில் வெண்மையான பனிகட்டியுடன் கூடிய மழை. சாதாரண மழைக்கே நான் மயிலாக ஆட ஆரம்பித்து விடுவேன் இதில் பனிக்கட்டிகள் வேறு சொல்லவா வேண்டும்.
பனிகட்டிகளை சேகரித்து அவனிடம் கொடுக்க அவன் சிரித்துகொண்டே நின்றிருந்தான். என் மனமோ ஆனந்த தாளமிட அவற்றை இவனிடம் சேர்க்க வெளியிலும் உள்ளும் ஓடினேன் ஓர் இளம் கன்று துள்ளுவதைபோல. அப்போதுதான் நிகழ்ந்தது.
யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள் நானோ மான். என்ன செய்வது சறுக்கியது. அரைநொடியில் என் நெற்றியோ மேஜையின் கூறியவிளிம்பை நோக்கி பயணிக்க ஒரு கை என் இடையை வளைத்து பிடித்தது.
நிலைதடுமாறிய அவன் என்னை சீராக்கி விட்டு கீழே விழுந்தான். அவன்மீது நானும். பிறகு எழுந்தவன் "பாத்து விளையாடு லூசு " என கூறிவிட்டு போய் அமர்ந்தான். என்னுள் என்றுமில்லாத ஓர் உணர்வு. மயிலாய் ஆடிய நான் மழைநிற்கவில்லை என்றாலும் தோகையை மடக்கி கொண்டு பெண்ணாக அமர்ந்தேன்.
அன்றிலிருந்து அவனை பார்க்கும்போது ஓர் உணர்வு. இது காதல்தான் என நானே ஏமார்ந்தேன் என் மனதிடம். அவனருகில் சென்றாலும் மடைதிறந்த வெள்ளமான என் வார்த்தைகள் ஆணையிடபட்டது. இருவருக்கும் பட்டிமன்றமாய் இருந்த இடங்களில் இப்போது மௌனமே மொழியாய் உள்ளது. அவனது இயல்பிலும் மாறுதலை உணரமுடிகிறது. ஒரு தோழனாய் கண்களை பார்த்து பேசுபவன் இப்போது விழிகளை அழைய விடுகிறான் என்னிடம் சிக்காமல். நான் பார்க்காத நேரத்தில் பார்ப்பதாய் நினைத்து ஏமார்ந்துபோகிறான். அவனது அசைவுகளை என்னால் முழுதாய் உணரமுடிகிறது.
"நீ காதலை பற்றி என்ன நினைக்குற?" என்று மௌனத்தை விடுத்து அவன் கூறியும் நான் மௌனமாய் தலைகுனிந்து அமர்ந்திருந்ததற்கு தண்டனைதான் இன்று ஒரு ஜோடி புறாவிற்கு பாதுகாவலர் பதவி.
மனதில் ஓர் தைரியம் பிறந்தது. கைபேசியை எடுத்தேன். வாட்ஸ்அப்பில் நுழைந்தேன். எப்பொழுதும் முதலில் இருக்கும் அவருடனான உரையாடல் இப்போது சற்று பின்தங்கி 'ம்ம்' 'சாப்டேன்' 'நீ' என சுருங்கிவிட்டது. அவரும் அப்படியே.
ஆனால் இன்று சிகப்பு இதயத்தை அவருக்கு அனுப்ப இரண்டு கோடுகள் விழுந்தன. அவற்றின் நிறம் மாறாமல் இருந்தது. இனையத்திற்கு வந்துவிட்டார் என காட்டவே அந்த இதயங்களை குப்பைக்கு அனுப்பிவிட்டு "குட் மார்னிங்" என அனுப்பினேன். என் இதயத்தின் துடிப்பை என காதுகளால் கேட்கமுடிகிறது. அன்பானவரிடம் தன்னை சேர் என்று சொல்கிறது போல.
அவரும் எனக்கு பதில் "குட் மார்னிங்" அனுப்ப வாட்ஸ்அப்பை விட்டு வெளியே வந்தேன். அந்த நொடியில் என் மொபைலின் மேல் திரையில் இரண்டு இதயங்கள் எட்டி பார்த்தது.
வேகமாக உள்ளே நுழைந்தேன். ஏமாற்றமே...
'இந்த தகவல் அழிக்கப்பட்டுள்ளது' என்று திரையில் காட்டியது.
என் காதலை அவரிடம் கூற வேண்டும் ஆனால் எப்படி?. எது எப்படியோ உன் அருகில் இருந்தால் மட்டுமே போதும் என்று என் மனம் என்னை சமாதானம் செய்தது.
இதற்குள்ளாகவே ராதா வந்துவிட்டாள். எங்களின் பயனம் வீட்டை நோக்கி துவங்கியது. ஆனால் என் மனமோ அவரை சுற்ற ஆரம்பித்துவிட்டது. எப்படியும் காதலை கூறிவிடுவேன் என நினைக்கிறேன்.
-இப்படிக்கு காதலுடன் காதலி.




No comments: