சில்லென மார்கழி
பனி அவள் மேனியில் வீட்டிருந்த சிறுசிறு நீர் துளிகளை கோர்த்து ஒன்றாக்கி உறைய வைத்துகொண்டிருக்க
காலைபொழுதில் பன்னீரில் குளித்த பூவாக தண்ணீரை தலைக்கு ஊற்றிவிட்டு வந்தாள் ஷாலினி.
“அக்கா என்ன குளிச்சுட்டியா”
மஞ்சு வந்தாள்.
“ம்ம் நல்ல குளிருடி
இப்ப குள்ள்ள்ளிக்க போஓஓறியா” என ஷாலினி நடுங்கினாள்.
“நீ ஆடுறத பாத்தா
எனக்கு பயமா இருக்கே நான் அப்புறமா குளிச்சுகிடுறேன்” கையிலிருந்த சுடிதாரினை பாத்ரூமின்
கதவில் போட்டுவிட்டு ஓடிவிட்டாள்.
“ஏய் இப்ப நீ குளிக்காம
இரு உனக்கு இருக்கு”
“அம்மா விடு அவள
அப்புறமா குளிச்சா என்ன?”
“நீ பேசாதடி! என்கிட்ட
பேசாதனு சொன்னேன்ல எந்த மூஞ்சிய வச்சுகிட்டு என்கிட்ட பேசுற பொண்ணா வந்து பொறந்துருக்க
பாரு எனக்கு” காலையிலேயே ஆரம்பித்துவிட்டாள் மனோரமா. ஷாலினியின் அம்மா.
“ஏய் புள்ளயே மனகஷ்டத்துல
வந்துருக்கா நீ ஒருத்தி வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா” வெளியில் சாய்வு நாற்காலியில்
அமர்ந்துகொண்டே கந்தன் தன் மனைவியிடம் சமாதான்ம் பேசிகொண்டிருந்தார்.
“உங்க பேச்ச கேட்டுதான்
எல்லாம் இப்புடி நடக்குது சின்ன வயசுலயே பொட்ட புள்ளைங்களுக்கு செல்லம் குடுக்காதீஙன்னு
சொன்னா கேக்குறதில்ல இப்ப யாரு கஷ்டபடுறா நம்மதான”
“ஷாலினி நீ போம்மா!..”
என கூறிவிட்டு எழுந்து வந்தார். “மனோ!!! புள்ள பாவம்டி என்ன நினைக்கும் கொஞ்சம் பாத்து
பேசி புரிய வைடி”
“அம்மா காஃபி..”
மஞ்சு வந்தாள்.
“பல்லுவிலகாம காபியா
இப்ப பாரு உனக்கு” தலையினை தொங்கபோட்டுகொண்டு திரும்பி சென்றாள் மஞ்சு.
“ஏய் போயி மொத
குளிச்சுட்டு வர்ர நீ”
“சரிம்மா” சுருதி
இறங்கியது குரலில்.
“இதுங்கள பெத்து
வளத்தேன்ல எல்லாம் என் தலையெழுத்து” என அம்மாவின் குரல் காதில் ஒலித்துகொண்டே இருக்க
ஷாலினி கண்ணாடி முன்னால் நின்றிருந்தாள். ஒப்பனை எல்லாம் இல்லை தன் கவலையான முகத்தினை
தானே பார்த்துகொண்டிருந்தாள்.
அம்மாவின் கோபமும்
நியாயமானதுதான் பின்ன “அம்மா நான் ஒருத்தர காதலிக்குறேன்மா” என அம்மாவிடம் எந்த ரகசியமும்
கூறலாம் என்று நினைத்து கூறிய ஷாலினிக்கு கிடைத்தது அதிர்ச்சி மட்டுமே. ஆம் அப்பொழுதே
சாமியாடிவிட்டார்.
இருந்தாலும் காதலா
பெத்து வளத்த உறவா என வரும்போது ஏனோ மனம் காதலை நாடுகிறது. அதற்கு காரணம்கூட இருக்கலாம்.
ஆம் பெத்து வளத்தவர்கள் வெறும் இருபது ஆண்டுகள் வளக்கலாம் அதன்பின் வாழ்வில் பாதிக்கும்மேல்
தன் மனாளனுடன்தானே வாழவேண்டும் என்று பெண்மைக்குள் புகுத்தியுள்ளான் போல அந்த இறைவன்.
அதனால்தானோ என்னவோ
காதலெனும் அம்பிலிருந்து காக்க விழிகளை கவசமாக ஏந்திகொண்டிருந்தாள் ஷாலினி. அம்பு என்ன
அம்பு காதலென்பது குண்டூசிபோலகூட வந்து அணுகுண்டு போல மனதில் வெடித்து சிதறி பொங்கி
பொறுகும் என அவளுக்கு சிறிதும் தோன்றவில்லை. காற்றுகூட நுழையமுடியாத அவள் மனதில் கதிர்
நுழைய காரணமாக இருந்த அந்த தருணம் நினைவுக்கு வந்தது.
மூன்று நாட்கள்
விடுப்புக்கு பின் வங்கி திறந்திருக்க பணம் எடுப்போறும் போடுவோரும் அலைமோதிகொண்டிருந்தானர்.
“ஏய் என் பேனாவ எவனோ வாங்கிட்டு போனான்டா”
“ஹலோ பேனா இருக்கா”
“படிக்குற பையன்
மாதிரி இருக்க ஒரு பேனாகூட கொண்டு வரமாட்டியா” என பேனாவை வைத்தே ஒரு போர் நடந்துகொண்டிருக்க
கதவினை திறந்து உள்ளே வந்தாள்.
சில்லென்ற ஏசி
காத்து அவளை சிலிர்க்க வைத்தது. எல்லாம் தன் தந்தைக்கு வந்திருக்கும் பென்சன் பணத்தினைபற்றி
விசாரிக்கதான் வந்திருக்கிறாள்.
என்றும் ஒரு பெண்ணிடம்
சென்று விசாரிப்பதுதான் வழக்கம் அந்த பெண்ணின் இருக்கையினை பார்த்தாள். ஆனால் காலியாக
கிடந்தது. சுற்றம் முற்றும் பார்த்துகொண்டே
நடக்க ஏதோ பேனா மூடியை மிதித்து விட்டது போல உணர்ந்தாள்.
சட்டென கால்களை
எடுத்துகொள்ள அங்கு குணிந்திருந்த ஒருவன் “ஸ்ஸ் ஆஆ!” என கைகளை உதறிகொண்டிருந்தான் அவன்
கைகளில் ரத்தம் வந்துகொண்டிருக்க ஒரு சிறிய குண்டூசி அவன் கையில் குத்தியிருந்தது.
“சாரிங்க..”
அவள் ஒலி காதில்
கேட்காமல் தன் கையில் உள்ள குண்டூசியினை கவனமாக எடுத்தான்.
அவளோ அவனிடம் திட்டு
வாங்குவதற்காக அங்கேயே நின்றுகொண்டு பேந்த பேந்த விழித்துகொண்டிருந்தாள்.
உடனே அசிஸ்டடன்ட்
மேலாளர் அறைக்கு சென்று ஏதோ பவுடரினை தட்டிகொண்டு ஒரு பேன்டேஜினை ஒட்டிகொண்டு வந்தான்.
வந்து நன்றாக கன்னம்
பழுக்கும் அளவுக்கு அறைவான் இல்லை என்றால் காதுகுளிர திட்டுவான் என எதிர்பார்த்து நின்றாள்.
ஆனால் அவனோ அவளை கண்டுகொள்ளாமல் வேறு ஒரு குண்டூசியை எடுத்து தான் வைத்திருந்த பேப்பரில்
கோர்த்துவிட்டு அவள் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த அந்த பெண்ணிடம் “இத நெக்ஸ்ட்
மூவ் பன்னிடுங்க.. அப்புறம் இனி இந்த குண்டூசிலாம் இருக்க கூடாது.. சின்ன கிளிப் பின்
வாங்கி வைங்க”
“ம்ம் சரிங்க சார்..”
என கூறிய அந்த பெண் ஷாலினியை பார்த்து “மேடம் நீங்க பென்சன் விசயமா அசிஸ்டன்ட் மேனேஜர
பாக்கனும்னு சொன்னீங்கள்ள இவருதான்” என அவள் நகர்ந்துவிட ஷாலினிக்கு பிரட்சனை ஆரம்பமானது.
‘அட கடவுளே இப்புடியா
என்ன சோதிப்ப பேங்க்ல பணம் போட வந்தாலே ஏதோ அவனுக வீட்டு சொத்த திருடிகிட்டு போற மாதிரி
பேசுவாங்க இந்த லட்சனத்துல நான் வேற பணம் எடுக்குறது சம்ந்தமா பேசலாம்னு வந்தேன் பர்ஸ்ட்
இம்ப்ரஸ்ன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன் அப்டினு சொல்லுவாங்களே நான் வேற வந்தவுடனே அவர புண்ணாக்கிடேனே
நமக்கு பென்சன் கிடைச்ச மாதிரிதான்”
“உங்க அப்பா கந்தன்
வாத்தியாராதான இருந்தாரு”
“ம்ம் ஆமா சார்
கணக்கு வாத்தியார் கவர்மென்ட் ஸ்கூல்ல ரிட்டயர் ஆகுறதுக்கு முன்னாடி ரெண்டு வருசம்
ஹெட் மாஸ்டரா இருந்தாரு”
“என்னது ஹெட்மாஸ்டர்
ஆகிட்டாரா”
“இப்ப இல்ல சார்
இப்ப ரிட்டயர் ஆகிட்டாரு”
“ஓ அப்டியா”
“சார் சாரி சார்..”
“எதுக்கு உங்க
அப்பா ரிட்டயர் ஆனதுக்கா?”
“இல்ல அது வந்து..”
“சொல்லுங்க” என
நடந்துகொண்டே இருக்க அவளும் பின்னாலயே சென்றாள்.
“உங்க கைல குண்டூசி
நான் மிதிச்சு”
“ஓ அத சொல்றீங்களா..
அது எங்க தப்புதான் நிறைய பேரு கூடுற இடத்துல குண்டூசி வச்சுருந்தா என்ன பிரட்சனை வரும்னு
காட்டிட இதுவே ஒரு சின்ன கொழந்தை எதும் எடுத்து வாயில
போட்டுருந்துச்சுனா சொல்லுங்க…நீங்க
மிதிச்சதால என்னோட போயிடுச்சு”
“சார் நிஜமா என்
மேல கோவமே வரலியா” என கேட்கும் போது அவன் அந்த அறைக்குள் சென்றுவிட்டான். ஷாலினி வெளியிலேயே
நின்றாள்.
“குண்டூசி உள்ள
போச்சுல அந்த நொடி ஒரு அறைவிடனும்னு தோணுச்சு அடுத்த நொடி நான் என்ன ரியலைஸ் பன்னிகிட்டேன்..
சரி ஏன் வெளிய நிக்குறீங்க உள்ள வாங்க”
அவன் ஒரு அறை அறைந்திருந்தாள்கூட
வருத்தபட்டிருக்க மாட்டாள் ஆனால் இப்படி பேசுவான் என நினைக்கவில்லை.
“சார் நான் நீங்க
குனிஞ்சுருக்குறத கவனிக்காம வந்துடேன் சார்”
“தெரியும்.. அதான்
நான் ரியலைஸ் பன்னிகிட்டு சமாதானம் ஆகிட்டேன்..”
“சாரி சார்”
“ஹா ஹா.. எத்தன
சாரி.. வேணும்னா ஒரு பேப்பர்ல ஶ்ரீராம ஜெயம் மாதிரி எழுதிகொடுத்துட்டு போங்க நான் படிச்சுகிறேன்
உங்க சாரிய”
“சாஆஆர்..”
“சரி சரி விடுங்க
இது எனக்கு புதுசில்ல”
“என்ன?”
“ஐயோ உங்க அப்பா
கந்தன் சார்தான”
“ம்ம்”
“இந்தா பாருங்க”
என காதை திருப்பிகாட்டினான்.
“என்ன சார் இப்டி
ஒரு தழும்பு இருக்கு.
“ஐயோ நான் கணக்குல
மக்கு உங்க அப்பா அதான் எங்க வாத்தியாரு காத புடிச்சு திருகி திருகி டியூன் பன்னி இப்ப
பேங்ல உட்காந்துருக்கேன்”
“ஐயோ சாரி சார்”
“மறுபடியுமா?”
“இல்ல சார் சாரி”
“அட போங்கப்பா..சரி
கணக்கு சார் எப்புடி இருக்காரு”
“ம்ம் நல்லா இருக்காரு
சார்”
“நான் கேட்டதா
சொல்லுங்க”
“ம்ம் கன்டிப்பா
சார்.. இந்த பார்ம்???” என தான் கொண்டு வந்த படிவத்தினை நீட்டினாள். அதை வாங்கி பார்த்தவன்
“இத இப்டி புல் பன்ன கூடாது அப்பா சாரோட கையெழுத்து இங்க வரனும் அதும் கருப்புல போடனும்
நீங்க புளூல போட்டுருக்கீங்க”
“ஐயோ சாரி சார்”
“ஹா ஹா.. சரி நானே
வந்து எங்க சார்கிட்ட கையெழுத்து வாங்கிடுறேன் அப்புடியே அவர பாத்த மாதிரியும் இருக்கும்”
“சரிங்க சார்”
“ஆமா அட்ரஸ்”
“அந்த பார்மல இருக்கு
சார்”
“ஓகே நான் பாத்துகிறேன்
இன்னைக்கு வெள்ளிகிழமையா நாளைக்கு பேங்க் லீவுதான் நான் வந்து பார்ம் புல் பன்னி கையெழுத்து
வாங்கி எல்லாம் கிளியர் பன்னி குடுத்துடுறேன்.. கேட்டதா சொல்லுங்க”
“உங்க பேரு” என
ஷாலினி கேட்க முன்னாலிருந்த பெயர்பலகையினை எடுத்துகொண்டவன்.
“அய்யோ அவர்கிட்ட
என் பேர சொல்லிடாதீங்க அப்புறம் பழக்க தோஷத்துல கைல பெரம்பு எடுத்து வச்சிட போறாரு
அப்பனா பரவாயில்ல மூனு பேன்ட் போட்டு போவேன் இப்ப முடியாதே”
ஷாலினி சிரித்துகொண்டே
சென்றாள். அவள் கேட்ட சாரியும் இறுதியாக சிரித்துகொண்டே சென்றதும் இவன் மனதில் ஒட்டிகொண்டது.
அவளோ வெளியில் வாட்ச் மேனிடம் ஏதோ விசாரிக்க அந்த கண்ணாடி வழியாக பார்த்தான்.
அவள் இவனை பார்த்து
ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவன் வாட்ச் மேனிடம்
சென்று “என்ன கேட்டாங்க அந்த பொண்ணு?”
“அதுவா லூசு போல
சார் முன்னாடிதான் போர்ட் இருக்குல்ல அதுல பேர் பாக்காம வந்துடேன் சார் பேரு என்னனு
கேட்டு போவுது”
“நீங்க என்ன சொன்னீங்க”
“நான் சிவான்னு
பேர சொன்னேன் சார் எதும் பிரட்சனையா”
“இல்ல சும்மாதான்”
என சிவா சிரித்துகொண்டே தன் வேலைகளில் இயங்கினான்.
வீட்டில் நடந்த
சம்பவங்களை கூறி சிவாவினை பற்றி கூற கந்தனின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி “அட படுவா
அரைடவுசரு பேங்க்ல வேலை பாக்குறானா.. சின்ன புள்ளயா பாத்தது அவன..” என பூரித்து புகழ்ந்து
பேசினார்.
“ம்ம் ஆமாப்பா
நாளைக்கு அவரே வாராராம் உங்க்கிட்ட கையெழுத்து வாங்க”
“ம்ம் அப்ப நல்ல
பெரம்பா ஓடிச்சு வைக்கனும்” என வாத்தியார் சிரித்தார்.
“ஐயோ அப்பா அவரும்
அதேதான் சொன்னாரு நான் வர்ரதுன்னா சாரு பெரம்பு எடுத்து வச்சுடுவாருன்னு”
“ஐயோ இல்லம்மா
அவன அந்தபெரம்ப காட்டிதான் அடக்க முடியும் ரொம்ப சேட்டை பன்ற பையன்.. ஆனா நான் அவன
அடிக்கலாம் மாட்டேன் சும்மா மிரட்டதான் பெரம்புலாம் ஒருவாட்டி காத கிள்ளி ரத்தம் வந்துடுச்சு
அப்பகூட சார் எனக்கு பெருக்கல் வரல சார் சொல்லிதர்ரீங்களா அப்டினு கேட்டான் தெரியுமா”
என கந்தன் தன் பள்ளிகூடத்தில் நடப்பதாக நினைத்துகொண்டு கன்வு கண்டார்.
காலைவிடிய இன்று
எந்த வேலையும் இல்லை என நினைத்துகொண்டு கொஞ்சம் தாமதமாக எழுந்தாள். மஞ்சு ஷ்பெஷல் கிளாஸ்
என சென்றுவிட்டாள் போல.
“எட்டு மணிக்கு
அவளுக்கு யாரு ஷ்பெஷல் கிளாஸ் வைக்குறது” என ஷாலினி கூறிகொண்டே பிரஷ்ஷினை எடுத்து வாயில்வைத்தாள்.
“ஷாலினி அந்த பேப்பர்
எடுத்துட்டு வாம்மா”
“ம்ம் சரிப்பா”
என எச்சிலை துப்பிவிட்டு போய் எடுத்து வந்து கொடுத்துவிட்டு அங்க இருந்த தண்ணீர் அண்டாவில்
வாயினை சுத்தம் செய்துவிட்டு தண்ணீரெ துப்பவும் அங்கு வளைவில் ஒரு பைக் வீட்டினுள்
நுழையவும் சரியாக இருக்க அது சிவாவேதான் அவன் வெள்ளை உடையில் வந்து நிற்க இவள் லேசாக
சிவப்பு சாயம் பூசிவிட்டாள்.
“ஸ்ஸ்ஸ்.. சாரி
சார்”
“சரி விடுங்க நான்
ஹாரன் அடிச்சிருக்கனும்ல”
“ஏய் அரடவுசர்
என்னடா புது சட்டையா”
“சட்ட புதுசுதான்
சார் ஆனா டிசைன் இவங்க” என அவளை போட்டு கொடுக்க “அப்பா நான் கவனிக்கலப்பா… இந்தாங்க
தண்ணி கழுவிகோங்க”
“இல்ல சார் இருகட்டும்
நான் நேரா வீட்டுக்குதான் போறேன் நோ பிராப்ளம்”
“ஷாலினி மேனேஜருக்கு
ஒரு சேர் எடுத்துட்டு வா உட்கார” என கூற ஓடிசென்று எடுத்து வந்து கொடுக்க அவளை அவன்
கவனிக்க தவறவில்லை.
அதன் பின் நீண்ட
நாட்களுக்கு பிறகு தன் ஆசிரியரிடம் பேசிவிட்டு இருக்க அவரும் தன் குடும்பத்தினை பற்றி
கூற அரம்பித்தார். இடையில் ஷாலினியின் குறும்பு ஓட “இந்த டிசைன் மாதிரியா சார்” என
சிவாவும்கிண்டல் பன்ன தவறவில்லை.
“சரி சார் நான்
திங்க்கிழமை கன்பார்ம் பன்னிட்டு சொல்லுறேன்.. உங்க ஃபோன் நம்பர்”
“நான் போன்லாம்
வச்சுகிடலப்பா இவதான் வச்சுருக்கா ஷாலினி உன் நம்பர் சொல்லு” என அப்பா கூறியதும் அதை
வாங்கிகொண்டு திரும்ப “சார் உங்க நம்பர்?”
பைக்கின் அருகில்
நின்றவன் இவளை பார்க்க “இல்ல எதுனா டீடைல்ஸ் கேட்டுகுவேன்ல அதான்”
“சரி நான் உங்களுக்கு
ஒரு மிஸ்ட்கால் விட்டுடுறேன்” என அடிக்க அவள் ஃபோனில்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்ன
வென்று கேட்டான்.. கண்டுபிடி உள்ளம் சொன்னது என்னடத்தில் உருகி நின்றது.காதலது இதயம்
சொன்னதன்பே.
என ஓடி முடிக்க
“நல்ல பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்” என பைக்கினை முறுக்கிகொண்டு கிளம்பினான்.
அவளோ ஃபோன் செய்து
பேசிவிட திங்கள் கிழமை அவனை பார்க்க சென்றாள்.
“ஷாலினி தப்பா
எடுத்துகாதீங்க கொஞ்சம் ரஸ் பீரியட் இன்னைக்கு நீங்க நாளைக்கு வரமுடியுமா” என அவன்
கூறியவிதம் மனதில் ஒட்டிகொண்டது.
அடுத்த நாளும்
சென்றாள். எல்லாம் முடித்து கையில் கொடுத்தான்.
“இனி அதுபாட்டுக்கு
ஏறிடும் நீங்க கவலை படவேணாம் சரியா” என கூறிவிட்டு வேலையினை தொடர்ந்தான்.
ஆனால் ஷாலினியின்
மனதில் பூ பூத்திருப்பது அவள் அறியவில்லை. “சார் நாளைக்கு வரனுமா?”
“இல்ல இனி நீங்க
பேங் பக்கமே வர தேவையிருக்காது” அவள் கண்களை பார்க்காமல் கூறிகொண்டிருந்தான். ஏனோ தெரியவில்லை
அவளிடம் அப்படி ஒரு ஈர்ப்பு காணபட்டது.
“ம்ம் சரி சார்”
குரலில் சுரத்தையே இல்லை.
அவள் போன பின்தான்
ஏதோ எடுத்து செல்கிறாள் என அவன் மனம் கனத்தது. ஆம் அவள் எடுத்து சென்றுவிட்டாள். அவனது
பேனாவினை கூடுதலாக அவளது பேனாவினை அங்கு வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
“சிவா இது தப்புடா”
மனதில் திட்டிகொண்டான்.
ஆனால் இந்த காதல்
என்ன எப்போது எப்படி செய்யும் என்பது யாரும் யூகிக்க முடியாது அவளை காண வேண்டும் என
மனம் ஏங்கினாலும் ஒருசிறிய கட்டினை போட்டுகொண்டான்.
அவளும் இரவில்
தூங்காமல் தவித்தாள். ஏதோ ஒரு ஏக்கம் மனதில் குடிகொண்டு நின்றது. அவள் விட்டு சென்றது
பேனா மட்டும் அல்ல அதில் காதலெனும் எழுத்தும்தான்.
ஒருமாதம் எதும்
பேசிகொள்ளாமல் மனதிலேயே காதலை வளர்த்துகொண்டிருந்தனர். பின் அவளே வங்கிக்கு சென்றாள்.
“யார பாக்கனும்
மேடம்”
“அசிஸ்டன் மேனேஜர்..”
என இழுத்தாள்.
“அவருக்கு பீவர்மா”
ஷாலினிக்கு இதயமே நின்றது.
“ஐயோ என்ன ஆச்சு
ஹாஸ்பிட்டல் போனாரா?”
“தெரியல மூனுநாள்
லீவு எடுத்துருக்காரு அனேகமா இன்னைக்கு வர வாய்ப்பு இல்லதான்”
“சரி உடம்ப பாத்துகிட
சொல்லுங்க” என ஒரு சோகமான விழிகளுடன் வெளியில் நடக்க பைக்கினை நிறுத்திவிட்டு இருமிகொண்டே
வந்தான். அவனை பார்க்க கோவமாக வந்தது.
“இப்ப எதுக்கு
பேங்க்கு வந்த?” ஷாலினி கத்த ஆரம்பித்தாள்.
“ஏய் என்ன ஆச்சு”
என இருமினான்.
“உடம்பு சரியில்லைல
வேலைக்கு அவசியமா வரனுமா?”
“ஷாலினி இல்ல ஒரு
சின்ன கிளாரிபை இருந்துச்சு அதான் வந்தேன்”
“பேசாத..”
“சரி பேசல”
“ஹாஸ்பிட்டல் போனியா?”
“ம்ம் போனேன் எதும்
இல்ல சாதாரன பீவர்தான்டி”
“எங்க மாத்திரை
ஸ்லிப் காட்டு நான் நம்ப மாட்டேன்” என அவள்தான் பேசுகிறாளா என அவளே அறியவில்லை. என்னடா
அசிஸ்டன்ட் மேனேஜரயே ஒருத்தி கேள்வி கேட்கிறாள் என பேங்கில் சிலர் பார்த்துகொண்டே நிற்க
“ஏம்மா வேடிக்கை பாக்கதான் வந்தீங்களா” என வாட்ச் மேன் அந்த கூட்டதினை கலைத்துவிட்டார்.
“ஸ்லிப் பைலயேவா
வச்சுகிட்டு அலைய முடியும் நிஜமாடி நம்பு”
“சரி லீவு எடுத்துகிட்டியா?”
“ஆமா ஐஞ்சு நாள்
லீவு சொல்லிருக்கேன்”
“அப்ப எதுக்கு
வந்து உடம்ப கஷ்டபடுத்திகிற நீ” அவள் முகத்தில் அப்படி ஒரு உரிமையான கோவம் தெரிந்தது.
“நான் வந்தாதான்
ஒரு வேலை நடக்கும் பத்து நிமிசத்துல சொல்லிட்டு போயிடுவேன்டி”
“உடம்புக்கு எதையாவது
இழுத்து வச்சுட்டு நில்லு உனக்கு இருக்கு” என எச்சரித்துவிட்டு “காய்ச்சல் சரியானதும்
பேசு அதுவரைக்கும் என்கிட்ட பேசாத உடம்பு சரியில்லைனு ஒருவார்தை சொன்னியா நீ” என வேகமாக
நடந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டாள்.
அவள் போனதும்தான்
நினைத்தான் இருவரும் ஏதோ கனவன் மனைவிபோல சண்டையிட்டதாக தலையின் உலுக்கிகொண்டு உள்ளே
நுழைய “சார் உங்களுக்கு ஏத்த பொண்ணுதான்” என வாட்ச்மேன் சிரிக்க
“ஆமா கரெக்ட்தான்
அண்ணா” என சிரித்துவிட்டு உள்ளே சென்று வேலையினை முடித்துவிட்டு ஒன்பது நிமிசத்திலேயே
சென்றுவிட்டான் எங்கே மறுபடியும் வந்து “என்னடா பத்து நிமிசம் ஆச்சுனு” சொல்லி திட்டுனாலும்
திட்டுவா..
அவன் சென்றதும்
“மாத்திரை போட்டியா. இப்ப காய்ச்சல் எப்டி இருக்கு” என அலைபேசியில் பேசி கொண்டிருந்தனர்.
எல்லா காதலும்
மொட்டாகி பூவாகி காயாகி கனி சுவையாகும். ஆனால் இவர்களின் காதல் தொடங்கியதே “இப்ப எதுக்கு
பேங்குக்கு வந்த உடம்பு சரியில்லைல உனக்கு” என அவளது செல்லமான கோவமான கனியால்தான்.
அந்த கோவத்தினை சுவைத்தான் சிவா.
இப்படியே காதல்
மலர சிவா “ஷாலு உங்க வீட்டுல வந்து பேசவா”
“இல்ல நானே பேசிட்டு
சொல்றேன்ங்க”
“சரி ஷாலு நாம
சீக்கிரம் கல்யானம் பன்னிகிடலாம் எங்க அம்மாவேற கல்யானம் பன்னிகிட சொல்லி கச்சேரி வைக்குது”
என பயந்தான்.
“சரிங்க” என அவனிடம்
தைரியாமாக கூறிவிட்டு வந்தவளுக்கு அதிர்ச்சியாக அவள் அம்மா மனோரமா சாமியாட கந்தன்தான்
“நல்ல பையன்தான்டி” என சமாதானம் செய்தார்.
ஆனாலும் மனோரமா
ஒத்துகொள்ளவில்லை. இதே நிலைதான் சிவாவிற்கும் சிறுவயதிலிருந்தே அப்பா இல்லாமல வளர்த்த
அம்மா தன் அண்ணன் பொண்ணைதான் கட்ட வேண்டும் என அழுது புலம்பினார்.
“பேங் உத்யோகம்
என்றதும் பொண்ணு தாரேன்னு உன்ன ஆசை காட்டுறாங்கம்மா அப்பா இறந்தப்போ எங்க போனாங்க”
“டேய் மாமாவ அப்டி
பேசுறியா நீ”
“அம்மா புரிஞ்சுகோமா
எனக்கு இப்ப கல்யானம்வேணாம்”
“உன் மனசுல என்னடா
வச்சுருக்க?”
“அம்மா நான் ஷாலினின்னு
ஒரு பொண்ண லவ் பன்றேன்மா” என போட்டு உடைக்க “என்னடா பேரு வாயிலயே நுழையல மாமா பொண்ண
கட்டிகிட்டா உன் தகுதிக்கு நிறைய நகை போடுவாங்கடா..”
“நகைதான் முக்கியமா?”
“டேய் அந்த பொண்ணு
சீர் இல்லாம கல்யானம் பன்ன உன்ன ஏமாத்துதுடா” என கூற சிவாவும் விடாமல் எப்படியோ பேசி
அரைகுறையாக சமதிக்கவைத்துவிட்டான்.
இரண்டு வீட்டு
பெண்களும் ஏற்றுகொள்ளாமலே இந்த கல்யானம் முடிய இனிதே இல்லறத்தை துவங்கினர்.
ஆனால் சிவாவின்
அம்மா ஆரம்பித்துவிட்டாள் “இவ ஒரு ராணியம்மான்னு இவன் கட்டிகிட்டு வந்து நிக்குறான்..
ஒரு வேலையும் செய்யமாட்டேங்குது இதுவே என் அண்ணன் பொண்ணுன்னா” என அவன் மாமன் பொண்ணுடன்
ஒப்பிட்டு திட்டிகொண்டே இருந்தாள்.
ஆனால் ஏன்தானோ
தெரியவில்லை அந்த மாமன் பொண்ணு அடிக்கடி வீட்டிற்கு வருகிறதோ ஷாலினிக்கு புரியவில்லை.
இதில் இன்னும் கல்யானம் செய்யாமல்வேறு இருக்கிறது ஷாலினி கூட சில நல்ல வரன்கள் பார்த்துவிட்டாள்
அப்படியும் ஒன்றும் ஆகவில்லை.
இப்படியே போக அவன்
வீட்டிலில்லாத ஒருநாள் ஆரம்பித்துவிட்டாள். “ஊருல இல்லாத பொண்ணு கட்டிருக்கான் கட்டி
ஒன்னரை வருசம் ஆச்சு இன்னும் வயித்துல ஒரு புளுபூச்சிய காணோம்.. இதுவே என் அண்ணன் பொணுண்ணா
இன்னாரம் பத்து பெத்து போட்டுருப்பா” ஷாலினி அழுதேவிட்டாள். தன் வயிற்றினை தடவி பார்த்தாள்.
ஒரு லட்டர் எழுதிவைத்துவிட்டு
ஒரு வெள்ளை பத்திரத்தில் கையெழுத்து போட்டு மெத்தையில் வைத்துவிட்டு அப்பாவிடம் வந்துவிட்டாள்
கைநிறைய துணிகளை அள்ளிகொண்டு.
மனோரமா சண்டை போட்டாலும்
கந்தன் சமாதான படுத்தி அவள் சற்று நிதானமாகட்டும் என்று இருக்க வைக்க ஒருநாள் இரவு
அழுதுகொண்டே கழித்தவள் இப்போது தான் அழுத தடம் தெரியாமல் இருக்க கண்ணாடியின் முன் நின்றுகொண்டு
தன் அம்மாவின் தாலாட்டு கேட்டுகொண்டிருக்கிறாள்.
“யார கட்டி வச்சா
நல்லா இருப்பீங்கன்னு பெத்தவங்களுக்கு தெரியாதா? இப்புடி எவனையாவது இழுத்துகிட்டு ஓடுனா
இப்புடிதான் மாமியா பேசுவா இதுவே நான் பாத்து கட்டி வச்சுருந்தா வந்து நாலுவார்த்தை
கேப்ப்பேன்ல”
ஷாலினியோ கண்ணாடியை
பார்த்துகொண்டே இருக்க அருகிலிருந்த காலன்டரை பார்த்தாள். அவளுக்கு தேதி கடந்திருந்தது.
அந்த மூன்று நாட்கள் தாண்டி ஒருவாரத்திற்கு மேலாக ஆகிவிட்டது. வீட்டு வேலைகளிலேயே முடங்கி
கிடந்தவள் தேதியினை கவனிக்கவவில்லை.
அப்போது உள்ளே
குளித்துவிட்டு குளிருடன் ஓடி வந்த மஞ்சு தன் அக்காவினை கட்டிகொண்டு “அக்கா நீ இன்னைக்கு
ரொம் அழகா இருக்க”
“போடி” செல்லமாக
சிணுங்கினாள் ஷாலினி.
“சீரியாஸக்கா..
எதும் விஷேஸமா” என ஷாலினியின் வயிற்றில் தடவ ஷாலினி வெட்கபட்டாள்.
அப்போது வெளியில்
ஒரு வண்டி சத்தம் கேட்டு விட “சார் சார்”
“வாங்க மாப்ள”
என தந்தையின் குரல் கேட்க மஞ்சு வெளியே எட்டி பார்த்தாள்.
“உங்க பொண்ணு ஒரு
பார்ம் தப்பா புல் பன்னிருக்கு க.ஷாலினின்னு உங்க இன்சியல் போடாம பழக்க தோஷத்துல சி.ஷாலினின்னு
என் இனிசியல போட்டுருக்கு அதனால இது செல்லாதுன்னு சொல்லிடுங்க” என சிரித்தவனை காந்தம்
மீது ஒட்டிகொள்ளும் இரும்பாக ஓடி வந்து கட்டிபிடித்துகொண்டாள்.
“சாப்டியாடா”
“நீ சாப்பாடு போட்டியாடி
ஷாலு”
“சரி நம்ம பாப்பாக்கு
என்ன பேரு வைக்க போறீங்க” என அவனை கட்டிபிடித்துகொண்டே கேட்க “நிஜமாவாடி”
“ம்ம்” என ஷாலினி
தலையாட்ட மஞ்சுவும் தன் மாமாவினை பார்த்து தலையாட்டிகொண்டிருக்க.
“ஐ சூப்பர்டி செல்ல
பொண்டாட்டி ஷாலும்மா” என கன்னத்தில் முத்தம் கொடுக்க மஞ்சு அப்பாவின் கையிலிருந்த பத்திரத்தினை
வாங்கி “இந்த டைவர்ஸ் செல்லாது” என கிழித்தாள்.
-ஜெனி.
(ஒரு பெண் தன்
காதலனையே முழுதும் நம்பி புகுந்த வீடு எனும் கடலில் இறங்குகிறாள். அதில் கலங்கரை விலக்கமாக
காதலனின் உறவுகள் இருக்கலாமே அதில் என்ன தவறு..)






No comments: